சிவகங்கை மாவட்டம், காரைக்குடி புதிய பேருந்து நிலையத்திற்குள் டவுன் பஸ் மோதியதில், பைக் ஒன்று பேருந்தின் டயருக்கு அடியில் சிக்கியது. பைக்கில் வந்த இளைஞர் கடைசி நொடியில் குதித்து உயிர் தப்பிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருத்தங்கூரிலிருந்து 2ஏ வழித்தடத்தில் வந்த டவுன் பஸ், காரைக்குடி புதிய பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தபோது, அவ்வழியாக பைக்கில் வந்த இளைஞர் பேருந்தைக் கவனிக்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது பைக் மீது பேருந்து மோதியதில், பைக் பேருந்தின் டயருக்கு அடியில் சிக்கியது.

பேருந்து மோதியதும் சுதாரித்துக் கொண்ட இளைஞர், உடனடியாக பைக்கிலிருந்து குதித்து வெளியேறினார். இதனால், பெரும் விபத்தில் சிக்க வேண்டிய அவர் அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர் தப்பினார். எனினும், பேருந்தின் அடியில் சிக்கிய பைக் நொறுங்கிச் சேதமடைந்தது.

இதற்கிடையே, பைக்கை வெளியே எடுக்க முடியாமல் போக்குவரத்து ஊழியர்கள் நீண்ட நேரம் போராடினர். பின்னர் பொதுமக்களின் உதவியுடன், சேதமடைந்த பைக்கை ஒருவழியாக வெளியே எடுத்தனர்.

விசாரணையில், பைக்கை ஓட்டி வந்தவர் காரைக்குடி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராஜிப்கான் (28) என்பது தெரியவந்தது. லேசான காயங்களுடன் உயிர் தப்பிய அவரைச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காரைக்குடி வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் இளையராஜா, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டார்.

பேருந்து நிலையத்திற்குள் நடந்த இந்த விபத்தில், பைக் நொறுங்கிய நிலையில், இளைஞர் உயிர் தப்பிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related

“துாத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முத்துலாபுரம் அருகே 17வது முறையாக சேதமடைந்த பாலம் ”