கோவை: 

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு லோகோ வடிவில் யோகாசனம் செய்த மாணவர்கள் - கவனம் ஈர்த்த விழிப்புணர்வு..!

கோவையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, மனிதன், இயற்கை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் மாணவர்கள் சர்வதேச யோகா தின லோகோ வடிவில் அமர்ந்து யோகாசனம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

இந்த வித்தியாசமான நிகழ்வு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்ததுடன், யோகாவின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தது

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டம் கோவைபுதூரில் உள்ள ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சர்வதேச யோகா தினத்தின் அதிகாரப்பூர்வ லோகோ வடிவத்தில் அணிவகுத்து அமர்ந்தனர். 

உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் யோகாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இதில், மனிதன், இயற்கை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு இடையேயான ஒற்றுமையை பிரதிபலிக்கும் சர்வதேச யோகா தின  லோகோவின் வடிவத்திலேயே மாணவர்கள் அணிவகுத்து அமர்ந்தனர். 

தொடர்ந்து அனைவரும் இணைந்து  ஒருங்கிணைந்த முறையில் பல்வேறு யோகாசனங்களை செய்து தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

குறிப்பாக மாணவர்கள் யோகா தின லோகோ வடிவில் அமர்ந்து யோகாசனங்களை செய்தது அனைவரின் கவனத்தை ஈர்த்தது. 

மேலும், தினசரி வாழ்க்கையில் யோகாவை கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பள்ளி மாணவர்களின் இந்த யோகா சாகசத்தை பள்ளியின்  நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பொதுமக்கள்  மாணவர்களை பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

“கோவில்பட்டியில் சாலையோர கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு!”