சென்னை: சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) 32-வது பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு அரசியல் மற்றும் அமைப்புசார் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து விரிவாக விளக்கம் அளித்தார்.
இன்றைய 32-வது பொதுக்குழுக் கூட்டம் இதுவரை நடைபெற்ற கூட்டங்களிலேயே மிகவும் சிறப்பாக நடைபெற்றதாகவும், 1,314 பொதுக்குழு உறுப்பினர்களும், 152 சிறப்பு அழைப்பாளர்களும் கலந்து கொண்டதாகவும் வைகோ தெரிவித்தார். புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த வெற்றிவேல் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுள்ளதாக கூறினார். ஒன்றிய, நகர, மாவட்ட செயலாளர்கள் மற்றும் அணி அமைப்பாளர்கள் ஒருவர் பின் ஒருவராக தங்களது கருத்துகளை பொதுக்குழுவில் பதிவு செய்ததாகவும் தெரிவித்தார்.
பொதுக்குழுவில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் ஒருமனதாக, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலக வேண்டும் என்றும், இனி எந்த சூழ்நிலையிலும் மீண்டும் அந்த கூட்டணியில் இணையக் கூடாது என்றும் வலியுறுத்தியதாக கூறினார். இந்த கருத்தை தெரிவிப்பதற்கு முன்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் மதிமுகவை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகவும், திமுக அமைப்புச் செயலாளரும் அதேபோன்ற கருத்துகளை தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் நான்கு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதாகவும், சீர்காழி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வத்திற்கு பொதுக்குழுவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் அவர் வரவில்லை என்றும், பின்னர் செய்தியாளர்களிடம் தாம் மதிமுகவில் இல்லை, திமுகவில் இருப்பதாக கூறியதாகவும் தெரிவித்தார். அதேபோல் கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் பொதுக்குழுவில் பங்கேற்கவில்லை என்றாலும், அவர் வெளியிட்ட பதிவில் தாம் இன்னும் மதிமுகவில்தான் இருப்பதாகவும், கட்சியிலிருந்து விலகவில்லை என்றும் தெரிவித்துள்ளதாக கூறினார். சட்டமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக அவர்களுடன் ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் வைகோ தெரிவித்தார்.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக தமிழகத்தில் பாஜக ஆதிக்கம் வரக்கூடாது என்ற நோக்கத்தில் திமுக கூட்டணியில் இருந்தோம். அந்த காலகட்டத்தில் கூட்டணிக்குள் இருந்து ஒருநாள்கூட விமர்சனம் செய்யவில்லை. தேர்தலுக்குப் பிறகு அதிமுக ஆட்சி அமைப்பதற்கு திமுக ஆதரவு அளிக்கத் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனை அதிமுக நிர்வாகிகளும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் மறுத்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேபி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பிலும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. உண்மையில் அத்தகைய நிலைப்பாடு இருந்திருந்தால் அது மிகப்பெரிய அரசியல் மோசடியாக இருந்திருக்கும். அந்த தகவல் வெளியான உடனேயே திமுகவுடன் அரசியல் நட்பு தொடரக்கூடாது என்ற முடிவை எடுத்தோம் என்றார்.
எங்கள் இயக்கத்திலிருந்து வெளியேறிய சிலர் எனது குடும்பத்தினர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ஆனால் அவற்றை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சமீபத்தில் நடிகர் விஜய்யிடம் இருந்து ரூ.50 கோடி பெற்றதாகவும், பல மாளிகைகள் வாங்கியுள்ளதாகவும், ஓ.எம்.ஆர். பகுதியில் நான் வாங்கிய ஒரு பிளாட்டை மாளிகை என சித்தரித்தும் பொய்யான குற்றச்சாட்டுகள் பரப்பப்பட்டன. நான் எனது சொத்து விவரங்களை 1994-ஆம் ஆண்டிலேயே வெளியிட்டவன். பூர்வீக சொத்துகளை விற்றே சொத்துகள் வாங்கியுள்ளேன். எந்த ஆதாரமும் இல்லாமல் அவதூறு பரப்பிய தினகரன் உள்ளிட்டோர் மீது மானநஷ்ட வழக்கு தொடர உள்ளேன். இதற்குப் பின்னால் மற்றொரு அரசியல் கூடாரத்தில் இருப்பவர்கள் செயல்படுகின்றனர் என்பது எங்களுக்குத் தெரியும் என்றார்.
கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும், எனது நேர்மையையும் நாணயத்தையும் அனைவரும் மதிப்பார்கள். கடைசி மூச்சு வரை அதையே பின்பற்றுவேன். திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து மதிமுக விலகியுள்ளது. வரவிருக்கும் இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக செயல்படுவோம். உள்ளாட்சித் தேர்தலிலும் தமிழக வெற்றி கழகத்துடன் தோழமைக் கட்சியாக இணைந்து செயல்படுவோம் என்றார்.
தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் புதிய அணையோ அல்லது தடுப்புச் சுவரோ கட்டக்கூடாது என்று நடுவர் மன்றம் ஏற்கனவே கூறியுள்ளது. எனவே புதிய நடுவர் மன்றம் அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மதுக்கடைகளை முற்றிலும் அகற்ற வேண்டும் என்பதே மதிமுகவின் கொள்கை. எங்கள் ஊரில் மதுக்கடைகளை அகற்றியதைப் போல தமிழகம் முழுவதும் அகற்ற வேண்டும் என்பதற்காக மூன்று முறை நடைபயணம் மேற்கொண்டேன். இதுவரை பல மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் அது போதாது. மேலும் பல மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்றார்.
இந்த ஆட்சியில் லஞ்சம் இல்லை என்று முழுமையாக நம்ப முடியவில்லை. கமிஷன் கலாசாரம் தொடர்கிறது. இதுவும் கூட்டணியில் இருந்து விலகியதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். அண்ணாவின் ஆட்சிக் கொள்கைகளையும், மும்மொழிக் கொள்கை தொடர்பான நிலைப்பாடுகளையும் தமிழக வெற்றி கழகம் பின்பற்றுகிறது என்பதும் எங்களது ஆதரவுக்கான காரணங்களில் ஒன்றாகும் என்றார்.
இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறுவது தவறல்ல. அவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டாலும் மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்வார்கள். திமுக கூட்டணியில் இருந்தபோது தனிச்சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற எங்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை. மாறாக நான்கு சட்டமன்றத் தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்து எங்களுக்கு நிர்ப்பந்தம் மட்டுமே அளிக்கப்பட்டது என்றார்.
"வைகோ மரணத்துக்கு அஞ்சாதவன்; ஆனால் அவை சொல்லுக்கும் பழிச்சொல்லுக்கும் அஞ்சுபவன். கடந்த ஒன்பது ஆண்டுகளில் நாங்கள் கூட்டணிக்குள் எந்த விமர்சனமும் செய்யவில்லை. அப்படி செய்திருந்தால் எங்களை சின்னாபின்னமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பார்கள்" என்றும் அவர் கூறினார்.
உடல்நலக்குறைவு காரணமாக விரை வீக்கம் ஏற்பட்டுள்ளதால் திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்த வைகோ, திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தாம் போட்டியிட வாய்ப்பில்லை என்றும் கூறினார். திமுக ஒரு கட்டுக்கோப்பான கட்சி; எந்த எதிர்ப்பையும் சமாளிக்கும் திறன் அந்தக் கட்சிக்கு உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து தனிப்பட்ட குறைகளை கூற விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், நாங்கள் இன்னும் இந்தியா கூட்டணியில் தொடர்கிறோம். ஜூலை 8-ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறும் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் நாங்கள் பங்கேற்போம். வரவிருக்கும் இடைத்தேர்தலில் மதிமுக எந்தத் தொகுதியிலும் போட்டியிடாது என்றும் வைகோ தெரிவித்தார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.