“விலங்குகளுடன் அன்பாய் இருப்போம்; எல்லா உயிரினங்களும் வாழ்ந்திட அனுமதிப்போம்” என நடிகை சந்தியா வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை டோல்கேட் அருகே உலக விலங்குகள் தினத்தை முன்னிட்டு, விலங்குகளின் பாதுகாப்பு, நலன் மற்றும் உரிமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை அனிமல் டிரஸ்ட் சார்பில் கலா குபேந்திரன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏழை, எளிய மக்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.

“விலங்குகளுடன் அன்பாய் இருப்போம், எல்லா உயிரினங்களும் வாழ்ந்திட அனுமதிப்போம், உலக சமநிலையை பாதுகாப்போம், வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிப்போம்” என்ற கருத்துகளை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தின் முதன்மை செயல் அலுவலர் டாக்டர் சொக்கலிங்கம், புதுவண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் சேகர் சிங், சின்னத்திரை நடிகையும் விலங்கு ஆர்வலருமான சந்தியா ஜாகர்லமுடி, சுதாகர், டாக்டர் வெண்ணிலா, கீர்த்தனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய சின்னத்திரை நடிகை சந்தியா ஜாகர்லமுடி, “மனிதர்கள் மட்டுமே முக்கியம் என்று நினைக்காமல், ஒவ்வொரு உயிரினத்தின் வாழ்க்கையும் முக்கியமானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மனிதர்களுக்கு அவர்களுடைய உயிர் முக்கியம் என்பதைப் போலவே, நாய்களுக்கும் அவற்றின் உயிர் முக்கியம். எனவே, விலங்குகளை தேவையில்லாமல் துன்புறுத்துவதையும், கொடுமைப்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.

மனிதநேயம் என்பது மனிதர்களுக்கு மட்டும் காட்ட வேண்டிய ஒன்று அல்ல. அனைத்து உயிரினங்களிடமும் அன்பாகவும், கருணையுடனும் நடந்து கொள்வதுதான் உண்மையான மனிதநேயம். ‘நீங்களும் வாழ வேண்டும்; விலங்குகளும் வாழ வேண்டும்’ என்ற அடிப்படையில், மனிதர்களும் விலங்குகளும் இணைந்து வாழ்வதற்கான சமநிலையை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

மேலும், தெருநாய்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவு கிடைப்பதற்கான உரிய வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும் என்றும், விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

தமிழக முதலமைச்சர் விலங்குகளின் பாதுகாப்புக்காக தனி நல வாரியம் மற்றும் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, விலங்குகளை துன்புறுத்துவதைத் தடுக்கும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் சந்தியா வலியுறுத்தினார்.

விலங்குகள் தங்குமிடங்கள் குறித்து பேசிய அவர், “அனைத்து தெருநாய்களையும் ஷெல்டர்களில் கொண்டு சென்று அடைத்து வைப்பது தீர்வாகாது. ஷெல்டர் என்பது காயமடைந்த அல்லது மருத்துவ சிகிச்சை தேவைப்படும் விலங்குகளுக்கு மருத்துவமனை போன்ற இடமாக இருக்க வேண்டும். சிகிச்சை முடிந்த பின்னர் அவற்றை மீண்டும் அவற்றின் வாழ்விடத்திற்கே அனுப்ப வேண்டும். தெரு என்பது பல தெருநாய்களின் வாழ்விடமாக உள்ளது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது” என்றார்.

மேலும், விலங்குகளை பாதுகாப்பது தொடர்பாக நடிகர் விஜய் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேச வேண்டும் என்றும், அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் விலங்குகளை துன்புறுத்தாமல் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

“மனிதர்களும் வாழ வேண்டும்; விலங்குகளும் வாழ வேண்டும். இரண்டுக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்தி வாழ்வதே அவசியம்” என அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஏழை, எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டதுடன், விலங்குகளிடம் அன்பு மற்றும் கருணையுடன் நடந்து கொள்வது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Related

“50 ஆசிரியர்களுக்கு பெரி பெருமை விருதுகளை வழங்கிய சட்டபேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் !”