சென்னை ஓட்டேரி புளியந்தோப்பு துணை ஆணையர் அலுவலகத்தில், புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களில் பேருந்து மற்றும் சாலைகளில் பொதுமக்கள் தவறவிட்ட செல்போன்களை போலீசார் மீட்டு, உரிய நபர்களிடம் ஒப்படைத்தனர்.
ஓட்டேரி காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், மொத்தம் 192 செல்போன்கள் மீட்கப்பட்டன. காவல்துறை ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரிலும், கூடுதல் ஆணையர் வழிகாட்டுதலின்படியும், இணை ஆணையர் உத்தரவின் பேரிலும், துணை ஆணையர் சமித் சிங் மீனா ஆலோசனையின் படியும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
செம்பியம் உதவி ஆணையர் முரளி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மீட்கப்பட்ட 192 செல்போன்கள் அவற்றை தவறவிட்ட பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டன. கடந்த ஆறு மாதங்களாக கடின உழைப்புடன் செல்போன்களை மீட்ட சைபர் க்ரைம் உதவி ஆய்வாளர் பிரின்சி பிரிடா, தலைமை காவலர்கள் பாட்ஷா, சங்கீதா மற்றும் முதல் நிலைக் காவலர்கள் அப்துல்லா, சங்கீத், கண்ணன், லாவண்யா உள்ளிட்ட போலீசார் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பேசிய சைபர் க்ரைம் உதவி ஆய்வாளர் பிரின்சி பிரிடா, குறைந்த விலையில் கடைகளில் விற்பனை செய்யப்படும் செல்போன்களை பொதுமக்கள் வாங்க வேண்டாம் என அறிவுறுத்தினார். திருட்டு செல்போன்கள் சில கடைகளில் விற்பனை செய்யப்படுவதாகவும், இதுபோன்ற செல்போன்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், செல்போனில் ஓடிபி மூலம் பணம் எடுக்கப்படுவதாக சந்தேகத்திற்கிடமான குறுஞ்செய்தி வந்தால், பொதுமக்கள் உடனடியாக 1930 சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். தற்போது மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்குவதாகக் கூறி தொலைபேசி மூலம் மோசடிகள் நடைபெற்று வருவதாகவும், இதுபோன்ற அழைப்புகளை நம்பி மாணவர்களின் தரவுகள், முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம் எனவும் எச்சரித்தார்.
சைபர் மோசடிகளால் பல்வேறு இடங்களில் GPay உள்ளிட்ட ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் மூலம் பண இழப்பு ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், சைபர் குற்றங்களைத் தடுப்பதில் போலீசார் தொடர்ந்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் பிரின்சி பிரிடா தெரிவித்தார். தவறவிட்ட தங்களது செல்போன்களை மீட்டுக் கொடுத்த போலீசாருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டு சென்றனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.