சென்னை தண்டையார்பேட்டை மண்டலம்–4 அலுவலகத்தில் மாதாந்திர மண்டலக் குழுக் கூட்டம், தலைவர் நேதாஜி கணேசன் தலைமையில், மண்டல அலுவலர் ராஜ்குமார் முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் டில்லி பாபு,ஷர்மிளா, தேவி கதிரேசன், குமாரி, விமலா, ரேணுகா, பவித்ரா, விஜயலட்சுமி, மணிமேகலை, ஆனந்தி, சர்பஜெயா தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநகராட்சி பொறியாளர்கள், வருவாய்த்துறை மற்றும் மின்சார வாரிய அதிகாரிகளும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள், தங்களது வார்டுகளில் குப்பை அகற்றுதல், சாலை, கழிவுநீர், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். அதிகாரிகள் கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

மேலும், வீட்டு வரி உயர்வுக்கு எதிராக கவுன்சிலர்கள் குரல் கொடுத்ததைத் தொடர்ந்து தற்போது வரி குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து, மின்சாரக் கட்டணம் தொடர்பாகவும் கவுன்சிலர்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மாற்றுத்திறனாளி ஒருவரின் வீட்டிற்கு ரூ.22 ஆயிரம் வரை மின்சாரக் கட்டணம் வந்துள்ளதாகவும், கடந்த மூன்று மாதங்களாக அதிகரித்த மின் கட்டணத்தை பொதுமக்களால் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

“மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படவில்லை என மின்சார வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் பொதுமக்களுக்கு அதிகப்படியான மின் கட்டணம் வருகிறது. இது எப்படி நடக்கிறது என்பது புரியவில்லை” என கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.

“மக்களுக்கான பணிகளை அதிகாரிகள் முறையாக செய்ய வேண்டும்; மக்கள் விரோதப் போக்கை கைவிட வேண்டும்” என மண்டலக் குழுத் தலைவர் நேதாஜி கணேசன் வலியுறுத்தினார்.

கவுன்சிலர்கள் தெரிவித்த அனைத்து குறைகளையும் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related

“மடப்புரம் வைகை கரையில் குப்பை குவியலால் நோய் தொற்று அபாயம்”