தேசிய அளவில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற சாரண, சாரணியர் மாணவர்களுக்கான உத்சவ் 2026 போட்டிகளில் பங்கேற்று மூன்று விருதுகளை வென்று சாதனை படைத்த, தர்மபுரி மாவட்டம் அரூர் புனித அன்னாள் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு லயோலா நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டம் அரூரில், டிஎஸ்பி அலுவலகம் அருகில் உள்ள புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில், லயோலா நிர்வாகம் சார்பில் இவ்விழா நடைபெற்றது.
விருது பெற்ற மாணவர்களுக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி, டிரம்ஸ் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழாவில் தலைமை ஆசிரியர் ஏ.கோஸ்மாஸ் வரவேற்புரை ஆற்றினார். விருது பெற்ற மாணவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பெற்றோர்களும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்நிகழ்வில் பள்ளியின் தாளாளர் அருள் முனைவர் அலங்காரம் எஸ்.ஜே. மற்றும் அருட் தந்தையர்கள் கலந்து கொண்டனர்.
அரூர் பாரத சாரண சாரணியர் சங்கத்தின் சார்பாக மாவட்டச் செயலர் வீ.கலைவாணன், மாவட்ட பொருளாளர் ஏ.வி.இனியவன், பயிற்சி ஆணையர் வெ.ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். சித்த மருத்துவர் டாக்டர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் பேசிய பள்ளியின் தாளாளர், இந்த அரிய வாய்ப்பினை அரூருக்கும், தங்கள் பள்ளிக்கும் வழங்கியதற்காக தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் சாரணர் இயக்க மாநிலச் செயலாளர், அரூர் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட சாரண முதன்மை ஆணையர், அனுமதி ஆணை வழங்கிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
முடிவில் உதவி ஆசிரியை ஏ.அமுதா நன்றியுரை ஆற்றினார். நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவு பெற்றது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.