பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. 

தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலக உள்ளதாகவும், இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அவர் விரைவில் புதிய அரசியல் கட்சியை தொடங்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரங்களில் நிலவி வருகிறது.

இந்த சூழலில், தூத்துக்குடி மாநகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் ரமேஷ் கண்ணன் என்பவரின் பெயரில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளன.

அந்த போஸ்டர்களில், “பதவியால் உயர்ந்தவர் அல்ல... மக்களின் இதயத்தால் உயர்ந்தவர்”, “அரசியலை மாற்ற வந்தவர் அல்ல... அரசியலின் அர்த்தத்தையே மாற்ற வந்தவர்”, “சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது” போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
அண்ணாமலையின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்த பரபரப்பான சூழ்நிலையில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பல்வேறு அரசியல் யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

மேலும், சமூக வலைதளங்களிலும் இந்த போஸ்டர்களின் புகைப்படங்கள் வேகமாக பரவி வருகின்றன. இதனால், தூத்துக்குடி மாவட்ட அரசியல் களத்தில் புதிய விவாதம் எழுந்துள்ளதுடன், அண்ணாமலையின் எதிர்கால அரசியல் முடிவு குறித்து பொதுமக்களிடையேயும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Related

“தூத்துக்குடியில் இரவு நேரத்தில் வழிப்பறி : வியாபாரிக்கு அரிவாள் வெட்டு !”