வெம்பக்கோட்டை: விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடத்துப்பட்டி சந்திப்பு பகுதியில், இன்று (மே 31) மதியம் வெம்பக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையிலான காவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மாருதி ஸ்விஃப்ட் (TN 58 BK 7502) ரக காரை மறித்து சோதனையிட்டனர்.
அந்தச் சோதனையில், காரில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், சிவகாசி, விஸ்வநத்தம் ரோடு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (42) என்பவர், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைச் சட்டவிரோதமாகக் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, அவரிடமிருந்த 110 கிலோ எடை கொண்ட 490 பாக்கெட் கணேஷ் புகையிலை, 12 கிலோ எடை கொண்ட 100 பாக்கெட் புல்லட் ராணி மற்றும் 9 கிலோ எடை கொண்ட 150 பாக்கெட் விமல் என மொத்தம் 131.250 கிலோ புகையிலை பொருட்கள், ரூ.6,80,000 ரொக்கப்பணம் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வெம்பக்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, கிருஷ்ணமூர்த்தியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.