தூத்துக்குடியில் பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராவிடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட சோட்டையன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (40). இவர் முன்னாள் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் மேலும் இந்த பகுதியில் காய்கறி கடை மற்றும் வேன் டிரைவராகவும் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் இன்று மார்க்கெட்க்கு சென்று காய்கறிகளை வாங்கிவிட்டு தனது கடையில் காய்கறிகளை இறக்கி வைத்து விட்டு மீண்டும் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதற்காக அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு வருகை தந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இந்த படு பயங்கர படுகொலை சம்பவம் நடந்துள்ளது. இதன் காரணமாக இந்த பகுதியில் பதட்டம் அதிகரித்துள்ளது. இந்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிற்கு டிஜிட்டல் பேனர் அமைப்பதில் ஏற்பட்ட தகராறில் இந்த படுகொலை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

மேலும் குற்றவாளிகளை உடனே கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உறவினர்கள் ராமேஸ்வரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை மண்டல டிஐஜி திருநாவுக்கரசர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் ஆகியோர் நேரில் சம்பவ இடத்தை ஆய்வு மேற்கொண்டு கொலை செய்யப்பட்ட உறவினர்களிடம் கொலைக்கான காரணத்தை கேட்டு அறிந்தனர். இதை தொடர்ந்து குற்றவாளிகளை உடனே கைது செய்வதாக அவர்களிடம் உறுதியளித்தார்.
இதற்கிடையே இந்த கொலை தொடர்புடைய சிவச்சந்திரன், சிவகுமார், மணிகண்டன் மற்றும் ரவி ஆகிய நான்கு எதிரிகளையும் காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு, சம்பவம் நிகழ்ந்த 6 மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.