தேனி மாவட்டம் கம்பத்தில், இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் சினிமா பார்க்க சென்றவருக்கு, வழியில் ஏற்பட்ட வாய்த்தகராறில் குத்திக் கொலை செய்யப்பட்டார். கம்பம் வடக்கு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள அண்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பிரபு (32). இவர் கம்பத்தில் உள்ள தனியார் ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவியும் அதே கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு பிரபு, தனது மனைவி மற்றும் உடன் வேலை பார்ப்பவர்களுடன் கம்பம் புறவழிச்சாலை பகுதியில் உள்ள திரையரங்கத்திற்குப் படம் பார்க்கச் சென்றுள்ளார்.
அப்போது, கம்பம் புறவழிச்சாலை ஊத்துக்காடு பிரிவு அருகே பிரபு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, கம்பம் கோம்பை ரோடு பகுதியைச் சேர்ந்த ரஞ்சித், கிரி மற்றும் வருசநாடு பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் எதிரில் வந்து உள்ளனர். அப்போது அவர்கள் வந்த இருசக்கர வாகனமும், பிரபுவின் வாகனமும் லேசாக உரசிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதன்பிறகு பிரபு அங்கிருந்து தனது மனைவியுடன் புறப்பட்டுத் திரையரங்கத்திற்குச் சென்றுள்ளார். திரையரங்கத்தில் தனது மனைவியை இறக்கிவிட்டு, இருசக்கர வாகனத்தை நிறுத்துவதற்காக திரையரங்கு பார்க்கிங் பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த ரஞ்சித், கிரி மற்றும் முத்துப்பாண்டி ஆகிய மூவரும் அங்கு வந்து பிரபுவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து வாக்குவாதம் முற்றிய நிலையில், எதிர்தரப்பினர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரபுவைச் சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் பிரபு கீழே சரிந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக கம்பம் வடக்குக் காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கம்பம் வடக்குக் காவல்துறையினர், 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்து கிடந்த பிரபுவை மீட்டுச் சிகிச்சைக்காகக் கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரபுவிற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காகத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 14 ம் தேதி இன்று காலை பிரபு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, இக்கொலைச் சம்பவம் தொடர்பாகக் கம்பம் வடக்குக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய ரஞ்சித் மற்றும் கிரி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இவ்வ வழக்கில் தொடர்புடைய முத்துப்பாண்டியை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இவர்களுக்குள் முன்விரோதம் ஏதும் உள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திரையரங்கத்திற்குச் சென்ற வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கம்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.