சிவகங்கை அருகே கொடிக்காடு கண்மாயில் நேற்று முன்தினம் இரண்டு இளைஞர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று இரண்டாவது நாளாக காளையார் கோயில் சந்தைப்பேட்டை பகுதியில் சுமார் 300 பேர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் தொடர்புடையதாக ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் கூலிப்படையினர் என்றும், தவறான நபர்களை அடையாளம் கண்டு கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்துள்ள உறவினர்கள், சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும், மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காளையார் கோயில் சந்தைப்பேட்டை அருகே நடைபெற்று வரும் இந்த சாலை மறியல் காரணமாக முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வரும் போராட்டத்தால் பயணிகள், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி யுள்ளனர்.

போராட்டம் நடைபெறும் இடம் வழியாக கடந்து செல்ல வந்த ஆம்புலன்ஸ்க்கு போராட்டக்காரர்கள் வழிவிட மறுத்து போலீசார் மீது தண்ணீர் பாட்டில்களை வீசி எறிந்ததால் பதற்றம் ஏற்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு இன்னும் உடற்கூறு ஆய்வு நடைபெறாததால், நிலவும் பதற்றத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை மாவட்டம் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.