சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மனைவி முத்துலட்சுமி (36), உடல்நலக் குறைவால் நாடித்துடிப்பு குறைந்த நிலையில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நவம்பர் 1-ஆம் தேதி உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த மானாமதுரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மதுரையை அடுத்த அலங்காநல்லூர் அருகே உள்ள அரியூர் பகுதியைச் சேர்ந்த விஸ்வாசம் என்பவரின் மகன் மாசானம் (34) என்பவருக்குச் சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, முத்துலட்சுமிக்கும் தனக்கும் இடையிலான திருமணத்தை மீறிய உறவுமுறை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக மாசானம் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், மாசானமும் உயிரிழந்த முத்துலட்சுமியும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இருவரும் ஏற்கெனவே நன்கு அறிமுகமானவர்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மானாமதுரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.