சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே, நண்பர்களான 15 வயது பள்ளி மாணவர் மற்றும் 24 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓமலூர் அருகே கருக்கல்வாடி ஊராட்சி கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த தறித்தொழிலாளி நாகராஜின் மகன் கவுசிக் (15), கே.ஆர்.தோப்பு அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று காலை மகுடஞ்சாவடி–இடங்கணசாலை சாலையில், சித்தனூர் இரும்பாலைக்கு சொந்தமான இடத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.

தகவலறிந்து சென்ற மகுடஞ்சாவாடி போலீசார், கவுசிக்கின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, கவுசிக்கின் நண்பரான கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த தறித்தொழிலாளி சிவராஜ் (24), ஓமலூர் தெசவிளக்கு பகுதியில் உள்ள சுடுகாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் உயிரிழந்து கிடந்தார். அவரது உடலையும் ஓமலூர் போலீசார் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் இளைஞர்களின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கவுசிக்கும் சிவராஜும் முதல்நாள்  இரவு 9 மணியளவில் ஒன்றாகச் சென்றது தெரியவந்துள்ளது. இதனால், சிவராஜ் கவுசிக்கை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது இருவரின் மரணத்திற்கும் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். நண்பர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

Related

“சிவகங்கை அருகே இரட்டை கொலை: உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி சாலை மறியல் ”