பெரம்பலூர் மாவட்டம், வெண்பாவூர் கிராமத்தில், 12 வயது சிறுமியுடன் பழகிய கல்லூரி மாணவர் ஒருவரை, சிறுமியின் தந்தை இரும்பு ராடால் தாக்கியும் கத்தியால் குத்தியும் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள வெண்பாவூர் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அபிமன்யூ (வயது 21). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவருக்கு செல்போன் வாங்கிக் கொடுத்து, அவருடன் பழகி காதலித்து வந்துள்ளார். இந்த விபரம் சிறுமியின் தந்தை பாலசுப்பிரமணியனுக்குத் தெரியவந்தது.
தனது மகளுடன் கல்லூரி மாணவர் பழகுவதை அறிந்து ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியன் அபிமன்யூவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரத்தில் பாலசுப்பிரமணியன் இரும்பு ராடால் அபிமன்யூவை கொடூரமாகத் தாக்கியுள்ளார். மேலும், மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது இடது மார்பில் பலமாகக் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அபிமன்யூ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, உயிரிழந்த அபிமன்யூவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலைச் சம்பவத்தை செய்துவிட்டு தப்பியோடிய சிறுமியின் தந்தை பாலசுப்பிரமணியன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். பாலசுப்பிரமணியன் அந்த கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஆவார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.