நிலக்கோட்டையில் மாமனார் உயிரோடு இருக்கும் போது, அவர் இறந்ததாக வாரிசு சான்று பெற்று, ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரிக்க திட்டம். இறந்ததாக கூறப்பட்ட மாமனார், மருமகள் உட்பட 4 பேர் மீது காவல் நிலையத்தில் புகாரளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்த, முசுவனூத்து அருகே முத்தக்கம்மாபட்டியைச் சேர்ந்த விவசாயி போதராஜ் (73) இவருக்கு ஜெயலட்சுமி (70) என்ற மனைவி முத்துக்குமார் (46) சரவணன் (42) என்ற மகன்களும் விமலா (40) மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். போதராஜ் மனைவி ஜெயலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டார்.
இந்நிலையில், விவசாயி போதராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள விவசாய நிலங்கள் உட்பட பல்வேறு சொத்துக்களை மூத்த மகன் முத்துக்குமாருக்கு தானமாக எழுதிக் கொடுத்துள்ளார். இதில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு முத்துக்குமார் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்து விட்டார். இந்நிலையில், முத்துக்குமாரின் மனைவி தனது மாமனார் போதராஜ் தானமாக கணவர் முத்துக்குமாருக்கு எழுதிக் கொடுத்த சொத்தை மொத்தமாக அபகரிக்க திட்டமிட்டு, நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வாரிசு சான்றுக்கு விண்ணப்பித்துள்ளார். இதில், சம்பந்தப்பட்ட நிலக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் முறையாக விசாரணை செய்யாமல், முத்துக்குமாரின் தந்தை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதாகவும், தற்போது முத்துக்குமாரின் மனைவி மற்றும் இரண்டு மகன்கள் மட்டும் வாரிசாக உள்ளனர் என, வாரிசு சான்று வழங்கியுள்ளனர். இதுகுறித்து, தகவல் அறிந்த போதராஜ் என்பவர் தான் உயிரோடு இருக்கும் போது, இறந்ததாக எப்படி சான்று வழங்கினார்கள் என வருவாய்த்துறை அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். மேலும், தவறாக சான்று வழங்கிய கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர், வட்டாட்சியர் மற்றும் சான்று கேட்டு விண்ணப்பித்த மருமகள் உட்பட 4 மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மாமனார் உயிரோடு இருக்கும்போது ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரிக்க திட்டமிட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி, வருவாய்த்துறையினர் வாரிசு சான்று வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.