திண்டுக்கல்லில் கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த கொலையாளிகளால் பரபரப்பு ஏற்பட்டது. நள்ளிரவில் சடலத்தை தேடி அலைந்த காவல்துறையினர் மீட்டனர்.
திண்டுக்கல் அருகே இளைஞர் ஒருவர் கை கால்களை கட்டி கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகள் காவல் நிலையத்தில் சரணடைந்த பிறகு நள்ளிரவு ஒரு மணி வரை தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் குளத்துப் பகுதியில் சடலத்தை மீட்டனர்.
திண்டுக்கல், திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குளிப்பட்டி அருகே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளிக்கு பின்புறம் மிகப்பெரிய குளம் ஒன்று உள்ளது. முட்புதரும் பெரிய பெரிய பள்ளங்களும் நிறைந்த அந்த குளத்தில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடப்பதாக அந்தப் பகுதியில் தகவல் பரவியது.
தொடர்ந்து தகவல் அறிந்து சென்ற திண்டுக்கல் தாலுகா போலீசார் மற்றும் குற்றப்பிரிவு காவல்துறையினர் நீண்ட நேரம் தேடுதல் வேட்டை நடத்தியும் சடலம் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தாங்கள் தான் கொலை செய்ததாக கூறி இரண்டு இளைஞர்கள் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் சரணடைந்ததாக சொல்லப்படுகிறது.
அதே நேரம் நீண்ட நேரம் தேடியும் உடல் கிடைக்காததால் இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் அந்த குளத்துப் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். சுமார் 5 மணி நேரம் தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், நகர் காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திக் தலைமையிலான போலீசார் இளைஞரின் சடலத்தை கண்டுபிடித்தனர்.
கை கால்கள் கட்டப்பட்டு உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுப்பட்ட நிலையில் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டு திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவர். திண்டுக்கல் அருகே மொண்டியபட்டியை சேர்ந்த கரண்ராஜ் என்பது தெரிய வந்துள்ளது. கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய போலீசார் கொலைக்கான காரணம் குறித்தும், வேறு யாரேனும் கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.