கோவை மாவட்டம், சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இருவரை போலீசார் கைது செய்தனர். 

சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளபாளையம் பகுதியில் வசிக்கும் ஒரு தம்பதியின் 10 வயது மகள் நேற்று முன்தினம் (மே 21) மாலை வீட்டிற்கு அருகிலிருந்த கடைக்குச் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தில் சென்று சிறுமியை தேடியுள்ளனர்.

ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்காததால், சிறுமி சென்ற மளிகைக்கடைக்கு சென்று விசாரித்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞர் சிறுமியை அழைத்துச் சென்றது தெரியவந்தது. ஆனால் அவர் யார் என்று தெரியாததால் உடனடியாக சிறுமியின் பெற்றோர், சூலூர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில், நேற்று கண்ணம்பாளையம் குளக்கரை அருகே உடலில் காயங்களுடன் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாரா என்பதை அறிய, அவரது உடலானது பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனிடையே, சிறுமிக்கு நீதி கேட்டு அவரது உறவினர்களும் பெற்றோரும் சூலூர் காவல் நிலைய வாயில் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு 9:30 மணியளவில் துவங்கிய மறியல் காலை வரை நீடித்தது.

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் சிறுமியை கடத்தி கொலை செய்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும், கைதான கார்த்திக் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் அவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவருக்கு துணையாக இருந்த மோகன்ராஜ் என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிறுமியின் உறவினர்கள், சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும், சிறுமியின் முகம் உள்ளிட்ட பகுதிகள் சிதைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் உரிய நடவடிக்கை எடுக்கும்வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ரம்யா பாரதி, துணைத் தலைவர் சாமிநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் சூலூர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட கார்த்திக், மோகன்ராஜ் ஆகியோரை விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற முக்கிய குற்றவாளி கார்த்திக், அருகிலுள்ள மதில் சுவர் மீது ஏறி குதித்ததில் கால் மற்றும் கையில் முறிவு ஏற்பட்டது. தற்போது அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரண்டாவது குற்றவாளியான மோகன்ராஜ், சூலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், நீதிபதி அருண்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை விசாரித்த நீதிபதி, மே 27-ஆம் தேதி வரை மோகன்ராஜை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Related

“விருதுநகர்- வெம்பக்கோட்டையில் புகையிலை பொருட்கள் கடத்தல்: ஒருவர் கைது!”