புதுடெல்லி: மேற்காசியாவில் நிலவும் பதற்றம் காரணமாக இந்தியாவில் விமான எரிபொருள் விலை இரு மடங்காக உயர்த்தப்பட்டு, ஒரு கிலோ லிட்டர் ரூ.2.07 லட்சத்துக்கு விற்கப்படுகிறது.
பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை சர்வதேச சந்தை நிலவரங்கள் மற்றும் அந்நிய செலாவணி மாற்று விகிதத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று எல்பிஜி மற்றும் ஏடிஎப் (aviation turbine fuel) விலைகளை மாற்றி அமைக்கின்றன.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது கடந்த பிப். 28-ம் தேதி தாக்குதலை தொடுத்தன. இதற்கு ஈரான் பதிலடி கொடுக்கத் தொடங்கியது. ஈரானுக்கு எதிராக தொடங்கிய இந்த போர், வளைகுடா நாடுகளுக்கும் பரவியுள்ளது. மேலும், உலகுக்கு 4-ல் ஒரு பங்கு எரிபொருளை வழங்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளது. மோதல் ஒரு மாதத்தைக் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருவதால், சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
தற்போது, இந்தியாவில் விமான எரிபொருள் விலை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.1,10,703.08 உயர்த்தப்பட்டு, ரூ.2,07,341.22 ஆக விற்கப்படுகிறது. நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது 114.5% உயர்த்தப்பட்டுள்ளது.
இதுவே முதல்முறை: விமான எரிபொருள் விலை ரூ.2 லட்சத்தைத் தாண்டி விற்கப்படுவது இதுவே முதல்முறை. இதற்கு முன் உக்ரைன் மீதான ரஷ்ய போர் காரணமாக கடந்த 2022-ல் விமான எரிபொருள் விலை கிலோ லிட்டருக்கு ரூ.1.1 லட்சம் உயர்த்தப்பட்டது. எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள இந்த கடும் உயர்வால், விமானப் பயணக் கட்டணம் உயர்த்தப்படுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.
வணிக கேஸ் விலை உயர்வு: இதேபோல், வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் காஸ் சிலிண்டர்களின் விலை இன்று உயர்த்தப்பட்டுள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை சுமார் ரூ.200 உயர்த்தப்பட்டுள்ளது. இது ஹோட்டல் உரிமையாளர்கள், உணவகங்கள் மற்றும் சிறு தொழில் செய்பவர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக உணவகங்களில் உணவுகளின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.